இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அது இன்று (07ஆம் திகதி) முற்பகல் 11.30 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 700 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 4.90 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 87.40 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.
இடியுடன் கூடிய மழை
இத் தொகுதி மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை நாளை, ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடும் எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 20 மணி நேரம் முன்