தொடரும் சீரற்ற காலநிலை : கடும் அவதியில் மலையக மக்கள்
மத்திய மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் தோட்டப் பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரமொன்று வீதியில் விழுந்ததன் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மரம்
பிரதான வீதியில் விழுந்து கிடந்த பாரிய மரம் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து அவ்வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூங்கில் தொகைகள் பிரதான வீதியில் வீழ்ந்துள்ளதால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மிக அவதானமாக செல்ல வேண்டுமென காவல்துறையினர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்தியாவசிய பணி
நிலவும் பலத்த காற்றினால் உயர் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் மஸ்கெலியா சிவனொளிபாதமலை நல்லதண்ணி பகுதியில் நேற்று (23) பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹட்டன் கொட்டகலை உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட வண்ணமே உள்ளதால் அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாவனையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |