இஸ்ரேலுக்கு பதிலடி : சரமாரியாக ஏவப்பட்ட ஏவுகணைகள்
லெபனானில் வைத்து ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் ஷேக் சலே அல் அரூரியைக் கொன்றதற்கு பதிலடி நடவடிக்கையாக ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது இன்று (06) ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
சுமார் 60 ஏவுகணைகளை ஹெஸ்புல்லா அமைப்பினால் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவப்பட்ட ரொக்கெட்டுகள்
'சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக பதிலடி கொடுக்கவுள்ளோம். அதில் முதன்மைத் தாக்குதலாக இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ரொக்கெட்டுகளை ஏவியுள்ளோம்' என ஹமாஸின் ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்புல்லா தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா 'விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும்' என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அடிக்கடி தாக்குதல்கள்
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 முதல் தொடங்கியிருக்கும் இந்தப் போரில் இஸ்ரேல் லெபனான் எல்லையில் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்றபடி உள்ளன. அது பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான சண்டையாக இருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தொடரும் இந்தத் தாக்குதல்களில் லெபனானில் 129 ஹெஸ்புல்லா போராளிகள் உள்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |