மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு
லெபனான் (Lebanon) முழுவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கருவிகள் வெடித்ததில் மொத்தமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,750 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
லெபனான் முழுதும்
இஸ்ரேல் (Israel) - காசா போர் ஆரம்பத்தில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் (Iran) ஆதரவுடைய ஹிஸ்புல்லா அமைப்பினர் தொலைபேசிகளை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொலைபேசிகளுக்கு அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் லெபனான் முழுவதிலும் வெடித்து சிதறியுள்ளன.
குற்றச்சாட்டு
இதன் படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்றும் பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இது குறித்து இஸ்ரேலிய தரப்பில் இருந்து எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |