கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கவுள்ள பிரமுகர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கானிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொதுப் பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகள் கொண்டு வரும் கைப்பைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கானிங் இயந்திரங்கள் உள்ளதாகவும், ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அந்த வசதி இல்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் தொழில்நுட்ப ஸ்கானிங் இயந்திரங்கள்
எனவே, சிறப்பு முனையம் வழியாக வரும் பிரமுகர்களின் கைப்பைகள் சோதனை செய்யப்படுவதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். உயர் தொழில்நுட்ப ஸ்கானிங் இயந்திரங்கள் பல நாடுகளில் உள்ள சிறப்பு பயணிகள் முனையங்களிலும் நிறுவப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானம் மூலம் கைப் பைகளில் கொண்டு வரப்படும் சட்டவிரோத பொருட்கள் வரி செலுத்தாமல் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதும் தடுக்கப்படும்.
தங்கத்துடன் வந்து சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
03 கிலோ தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து, அதிபரும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி வெளியேறும் இடத்தில் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவுமாறு அதிபரின் செயலாளர் ஊடாக சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சிறப்பு பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் நுழையும் இடங்களில் இந்த ஸ்கானிங் வசதிகளை ஏற்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
