நாட்டில் பெய்த அதிகூடிய மழைவீழ்ச்சி! நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, அதிகளவான மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்று (15.05.2026) காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
176 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
இதனுடன், ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றரும், தெரணியகலை பகுதியில் 122 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, நேற்று (14.05.2026) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள போதிலும், இதுவரை அது எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை.
மேலும், அத்தனகலு ஓயாவின் தூனமலே அளவீட்டு நிலையப் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 176 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், நேற்று (14) கிரியுல்ல பகுதியில் பெய்த 172 மில்லிமீற்றர் கனமழையால் மா ஓயாவின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
மழை பெய்யும் சாத்தியம்
எனினும், கிரியுல்ல மற்றும் பாதல்ஹம பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும், இதுவரை வெள்ளப்பெருக்கு நிலை ஏற்படவில்லை.

கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை ஆற்றுப்பகுதிகளில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், பல ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு” அவர் அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |