பௌத்தமயமாக்கலை தடுக்க மோடியின் உதவியை நாடுங்கள்: அண்ணாமலைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்துக் கோவில்களை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க பிரதமர் மோடியின் உதவியை நாடுங்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வவுனியாவில் தொடர்ச்சியாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (03.04) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் உதவி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், "தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று பல தலைவர்கள் கூறியும் தமிழ் நாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில் மௌனம் காக்கின்றது.
அவர்கள் தமிழர் ஆதரவை நாடினால், இனப்படுகொலையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, இந்திய நாடாளுமன்றத்தில் அதனை அங்கிகரிக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி தன்னை இந்து மதத்தின் பாதுகாவலராக சித்தரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷா இருவரும் தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் இந்து மதத்தின் மீது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.
அண்ணாமலை , சிங்கள பௌத்தர்களால் குருந்தூர்மலை, வெடுக்குநாறி, கிண்ணியா வெந்நீர் ஊற்றுகள் மீது அண்மைக்காலமாக இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் நாம் அச்சமடைந்துள்ளோம்.இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்.
தமிழினப்படுகொலை
நீங்கள் பௌத்தரா அல்லது இந்துவாக அடையாளப்படுத்துகிறீர்களா என்பதை அறிய விரும்புகிறோம்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே தன்னை ஒரு பெருமைமிக்க தமிழ் இந்து என்று கருதினால், தமிழினப்படுகொலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த வேண்டும்.
தமிழ் இந்து கோவில்களை விட்டு விலகுமாறு சிங்களவர்களை கேட்க வேண்டும். இந்து கோவில்களின் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் ஒரே இரவில் காஷ்மீரின் அரசியலமைப்பை மாற்றினார்கள். இலங்கையிலும் ஒரே இரவில் அதனை செய்ய முடியும். அப்படி நடந்தால் தமிழக தமிழர்கள் அனைவரும் பாஜகவை ஆதரிப்பார்கள்" என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |