கனடாவில் இந்துக்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: கனடா பொது பாதுகாப்பு துறை கண்டனம்
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும் படி மிரட்டல் விடுத்து வெளியிடப்பட்ட காணொளிகளை கனடா பொது பாதுகாப்பு துறை கண்டித்துள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் தலைவரின் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவை விட்டு வெளியேறும்படி இந்திய மக்களுக்கு காலிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று காலிஸ்தான் அமைப்பு எச்சரிக்கும் வகையிலான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.
காணொளிகளை பரப்புவது கண்டிக்கத்தக்க விடயம்
இந்தியா மற்றும் கனடாவுக்கிடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டு சமூக வலைதளங்களில், குறித்த காணொளி பரவுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான காணொளிகளை பரப்புவது கண்டிக்கத்தக்க விடயமென கனடா பொது பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
அத்துடன், சில தரப்பினரின் இந்த நடவடிக்கை கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த துறை சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை என்பதை சுட்டிக்காட்டிய அந்த நாட்டு பொது பாதுகாப்பு துறை ஆக்கிரமிப்பு, மிரட்டல் அல்லது பயத்தை தூண்டும் செயல்களுக்கு தங்கள் நாட்டில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விடயங்களை நாட்டை பிளவுபடுத்த மாத்திரம் உதவுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் எனவும் சட்டத்தை பின்பற்ற வேண்டுமெனவும் பொது பாதுகாப்பு துறை கோரியுள்ளது.