இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்!
இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவைகளும் அண்மைக்காலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தீவிர கண்காணிப்பு பணி
இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் மர்ம வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொட்டலங்களை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த பொதிகள் 116 கிலோ எடையை கொண்டது என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |