முல்லைத்தீவில் வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு(படங்கள்)
முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றிலே முதன் முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு கௌரவிப்பு விழா நடைபெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் தணிகாசலம் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (13) மிக சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலை 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
வரலாற்று சாதனை
இன்று வரையான கல்வி வரலாற்றிலே முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து சு.யதிப்சன் என்ற மாணவன் வரலாற்று சாதனையினை நிலையாட்டியுள்ளான்.
எனவே பாடசாலையின் பெயரினை வெளியுலகிற்கு எடுத்துரைக்க காரணகர்த்தாவாக விளங்கிய அம்மாணவனுக்கான கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள், அப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ,விளையாட்டு உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம மற்றும் அயற் கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள்,விளையாட்டு ஆர்வலர்கள்,பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவனுக்கு கௌரவிப்பு
சித்தியடைந்த மாணவனுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்ததுடன், மாணவனின் எதிர்கால கல்வி தேவைகளின் பொருட்டு துவிச்சக்கர வண்டியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏனைய தரம் 5 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், சாப்பாட்டு பெட்டிகள், புதிய சீருடைகள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய அனைத்து பாடசாலை சிறார்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் மாணவனை சித்தியடைய வைத்தமைக்காக அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் மாணவனின் பெற்றோர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |