வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்
இரண்டாம் இணைப்பு
வெல்லாவெளியில் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி காவல்துறையினரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி காவல் நிலைய பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி இந்நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை மாவீரர் தின வாரத்தில் அதனுடன் தொடர்புபட்ட எந்த நிகழ்வுகளையும் செய்ய முடியாது என்ற விதத்தில் இத்தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று பிற்பகல் இத்தடையுத்தரவு தொடர்பிலான விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையால் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைக்குமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்காலிகமாக நிறுத்தம்
இதனையடுத்து குறித்த நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், நீதிமன்றத்தினை நாடி இத்தடையுத்தரவினை நீக்கி நிகழ்வினை குறித்த தினத்திலேயே முன்னெடுப்பதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
நிகழ்வு தொடர்பான பதாதைகள் அகற்றப்பட்டு காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |