சுற்றுலா பயணிகளிடம் கைவரிசை காட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது
விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து ரூ. ஆறு மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் உனவட்டுனவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உனவடுன சுற்றுலா காவல்துறையினருடன் இணைந்து திருடிய பணத்தை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.
ரஷ்ய சுற்றுலா பயணிகளிடம் திருட்டு
சந்தேகத்திற்குரிய ஹோட்டல் உரிமையாளருக்கு சொந்தமான பிரதான ஹோட்டலுக்கு மேலதிகமாக, மற்றுமொரு ஹோட்டலின் மூன்று அறைகளில் தங்கியிருந்த ரஷ்யர்களிடமிருந்து டொலர்கள் மற்றும் இலங்கை நாணயங்கள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஊழியர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 752,722 ரூபாய் மற்றும் USD 6,100, 195,000 ரூபிள் மற்றும் 200 யூரோக்கள் திருடப்பட்டதாக ஜனவரி 1 ஆம் திகதி ஹபராதுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் கைது
இதன்படி, தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஹபராதுவ காவல்துறையினர், உனவடுன சுற்றுலா காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.