இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் வீடு..! தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் (M K Stalin) திறந்து வைத்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கௌரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் - திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி - நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் - கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
