'அரக்க குணம் கொண்ட ஐ.நா' - ஈழத்தமிழ் சமூகம் ஏன் அதீதமாய் நம்புகின்றது..!
ஐ.நாவை நோக்கிய கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன. செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் இடம்பெறவிருக்கின்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஈழத்தமிழ் சமூகம் அளவுக்கதிகமாக நம்புகின்றது. எனவே ஐ.நா என்பது என்ன?
அது எவ்வாறான அமைப்பு என்கிற புரிதல்களை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
முன்னைய காலங்களில் கடவுளின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் தான் பெரும் போர்கள் நடத்தப்பட்டன.
20ஆம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் பெரும் போர்கள் நாடுகளுக்கிடையில் வெடித்தன. அவ்வாறான போர்த் தொடர்களில் முதலாவதாக 'கொரியாப் போர்' முக்கியமானது.
ஆசியாவில் புதிய போர் முனை
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானைக் கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான் மீது அணு குண்டு வீசி தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டுத் தாக்குதலின் மூலம் அமெரிக்கா தன்னை வல்லரசாக அறிவித்துக் கொண்டது. தொடர்ந்து அமெரிக்க இராணுவம் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கியது.
இதற்கிடையே சோவியத் இராணுவம் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கொம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பிற்போடப்பட்டது.
தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர்.
இதே நேரம், வட கொரியாவில் கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ஹிம் உல் சூங் புதிதாக தொழிலாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் இராணுவத்தின் உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார்.
'ஒருங்கிணைந்த கொம்யூனிச கொரியா', ஹிம் உல் சூங்கின் லட்சியமாக இருந்தது. ஹிம் உல் சூங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 வீதமான கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
கொம்யூனிச அபாயம்
ஹிம் உல் சூங்கின் படைகளின் முன்னேற்றம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்படியே விட்டால், 'கொம்யூனிச அபாயம்' ஆசியாவில் பரவி விடும். 'உலகம் எதிர்நோக்கும் அபாயத்தை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு' ஐ.நா. சபை கூட்டப்பட்டது.
அன்று, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபையில் சீனா என்ற பெயரில் தாய்வான் அங்கம் வகித்தது. கொம்யூனிச சீனாவுக்கு உறுப்புரிமை கொடுக்க வேண்டுமென கோரி, சோவியத் யூனியன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது.
எஞ்சிய பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத அமெரிக்கா, கொரியாவுக்கு ஐ.நா. படை அனுப்பும் கோரிக்கையை முன்வைத்தது.
அமெரிக்க சார்பு நாடுகளால் நிரம்பியிருந்த ஐ.நா. சபை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்தின. அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. இராணுவம் கொரியா சென்றது.
பெயர் மட்டும் தான் 'ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை' என்றிருந்தது. 90 வீதமான இராணுவத்தினர் அமெரிக்கர்களாக இருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் அட்டூழியங்கள்
இந்தியா போன்ற வேறு சில நாடுகளும் தம் பங்குக்கு சிறிய படையணிகளை அனுப்பி இருந்தன. கொரியப் போரில், ஐக்கிய நாடுகளின் 'அமைதிப் படை' நிகழ்த்திய அட்டூழியங்கள் அளவிட முடியாதவை. கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளால், ஆயிரக்கணக்கான கொரியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், உடமைகளும் அழிந்தன.
இவற்றிற்கு சிகரம் வைத்தது போல, அடைக்கலம் கோரி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை ஐ.நா இராணுவம் படுகொலை செய்தது. அந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கோருமாறு, இன்றைய கொரிய அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது.
இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பாவில் விழுந்த குண்டுகளை விட, இரு மடங்கு அதிகமான குண்டுகள் சின்னச்சிறு கொரிய தேசத்தின் மீது வீசப்பட்டன.
தற்காலிக போர் நிறுத்தத்துடன், கொரியப் போர் முடிவுக்கு வந்த போது, கோடிக்கணக்கான கொரியர்கள் ஐ.நா. சபையின் பெயரால் இனவழிப்புக்கு உள்ளாகினர்.
உலகம் இரு துருவங்களாக பிரிவு
வட கொரியாவின் பொருளாதார கட்டுமானங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இனப்படுகொலைகளை செய்த ஐ.நா.சபையிடமே, இனப்படுகொலை குறித்து விசாரிக்குமாறு கோரும் வேடிக்கையை நாம் இன்று பார்க்கிறோம். பேரழிவைக் கொண்டு வந்த கொரிய போரைத் தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது.
இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர். இதனால் பல நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இருப்பினும் ஐ.நா. பெயரில் போர் முனைப்புகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உலகம் தப்பியது.
சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் அதிபராய பின்னரே, இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்தது. 1990 ஆம் ஆண்டு, எண்ணெய் வளம் மிக்க, ஆனால் மேன்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படாத சதாமின் ஈராக், குவைத் மீது படையெடுத்தது.
குவைத் எண்ணெய்க் கிணறுகள் யாவும் பிரிட்டன் நிறுவனங்கள் வசம் இருந்தன. ஈராக்கின் ஆக்கிரமிப்பால் அவற்றை இழந்த பிரிட்டன் ஐ.நா.சபையில் முறையிட்டது. இதே நேரம் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு போட்டியாக ஈராக் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை.
பேட்ரியட் ஆயுதம்
ஐ.நா.சபையில் பெரும்பான்மை ஆதரவுடன், பன்னாட்டுப் படை குவைத்தை மீட்கச் சென்றது. குவைத்தை மீட்பதற்காக நடந்த வளைகுடாப் போரில், 'பேட்ரியட்' போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன. போர் முடிந்த பின்னரும், பேட்ரியட் ஆயுதம் தயாரித்த கம்பெனி கொள்ளை லாபமீட்டியது.
ஈராக்கும், குவைத்தும் ஒரே நாடாகவிருந்ததும், பிற்காலத்தில் ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டதும் உலகம் வசதியாக மறந்து விட்ட வரலாறு.
வளைகுடாப் போரின் பின்னர், முன்பு பிரிட்டன் வசம் இருந்த குவைத் எண்ணைக் கிணறுகள் யாவும் அமெரிக்க வசமாகின. அயல் நாட்டை ஆக்கிரமித்த குற்றத்தை ஈராக் மட்டும் செய்யவில்லை.
இஸ்ரேல் சிரியா, லெபனானின் பகுதிகளை ஆக்கிரமித்தது. ஸ்பானிய காலனியான மேற்கு சஹாராவை ஆக்கிரமித்த மொரோக்கோ, அதனை தனது நாட்டுடன் இணைத்தது. இவற்றின் மீதான ஐ.நா. தீர்மானங்களுக்கு யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை. ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியத்திற்கு பலியான இன்னொரு நாடு சோமாலியா.
1993 இல் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பல ஆயுதக் குழுக்கள் அதிகாரத்திற்கு போட்டியிட வழிவகுத்தது. நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டவென, அமெரிக்கா தலைமையில் ஐ.நா. படை அனுப்பப்பட்டது.
எதிர்பாராவிதமாக (அல்லது தவிர்க்கவியலாது) ஐ.நா. சமாதானப் படைக்கும், முதன்மை ஆயுதக் குழு ஒன்றுக்குமிடையில் சண்டை மூண்டது. நடுநிலை வகிக்கச் சென்ற ஐ.நா.படை தானே எதிரியாக களத்தில் இறங்கியது.
வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்
போர் என்று வந்து விட்டால், மனித உரிமைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வேலியே பயிரை மேய்வது போல, ஐ.நா. இராணுவம் மனித உரிமைகளை மீறியது.
அப்பாவி சோமாலிய மக்கள், வெள்ளையின இராணுவத்தினாரால் இழிவுபடுத்தப்பட்டனர். ஒரு சம்பவத்தில் பெல்ஜிய நிற வெறி இராணுவத்தினர், ஒரு சோமாலிய சிறுவனை கைது செய்தனர். அவனை சித்திரவதை செய்து, எரியும் நெருப்பின் மீது இறைச்சி போல வாட்டி வருத்தினார்கள். அந்தச் சம்வத்தை இன்னொரு சிப்பாய் புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி விட்டார்.
ஐ.நா. இராணுவத்தின் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆதாரமான புகைப்படங்கள், ஐரோப்பிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. நீதிமன்றத்தில் முறையிட சிறந்த ஆதாரம் கிடைத்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கருதினார்கள். சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர்.
இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட போதிலும், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. அண்மைக்காலங்களில் நடந்த போர்களில் பொஸ்னியா போர் முக்கியமானது. அதுவும் 'அமைதிப் பூங்காவான' ஐரோப்பாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா படையின் சுயரூபம் அம்பலம்
ஐரோப்பியர்கள் உன்னத நாகரீகம் கொண்ட மானுடர்கள் என்ற மாயை அகன்றது. கேள்வி கேட்க யாருமின்றி இனப்படுகொலைகள் தொடர்ந்ததால், ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட்டது. பொஸ்னியாவின் பல பாகங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு வலையங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று 'சிரபெனிசா'. அங்கே 'டச்பட்' என்ற பெயரில் நெதர்லாந்து இராணுவம் பாதுகாப்பு வழங்கியது.
சிரபெனிசாவில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள், தமக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைத்து விட்டதாக நம்பினார்கள். சில நாட்களில் ஐ.நா. படையின் சுயரூபம் அம்பலமானது. சிரபெனிசா நகரை சுற்றி வளைத்த சேர்பிய இராணுவம், மிக இலகுவாக பாதுகாப்பு வலையத்தை கைப்பற்றினார்கள்.
அகதிகளின் பாதுகாப்பிற்கென நிறுத்தி வைக்கப்பட்ட நெதர்லாந்து இராணுவம் தலைதெறிக்க ஓடியது. தமக்கு முன்னால் ஓடிய, (முஸ்லிம்) அகதிகள் மீது தாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொண்டே சென்றார்கள். அந்தக் காட்சிகள் டச்பட் சிப்பாய் ஒருவனால் படமாக்கப்பட்டன. ஆனால் மேலதிகாரி ஒருவரின் தலையீட்டால் அவை அழிக்கப்பட்டன.
இதன் பின்னர், டச்பட் உயர் அதிகாரிகள், சேர்பிய இராணுவ தளபதிகளுடன் கூடிக்குலாவிய படங்கள் அம்பலமாகின. சிரபெனிசாவில் நடந்த அட்டூழியம் பற்றிய விபரங்கள் நெதர்லாந்து அரசுக்கு தெரிந்திருந்தும் மறைத்தது வருகின்றது.
தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவது போல, ஆயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம் அகதிகளுக்கு நெதர்லாந்தில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில், நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்தோ, தெரியாமலோ சேர்பிய பேரினவாதத்திற்கு உதவியது.
ஐ.நாவின் தீர்ப்பை இலகுவில் எடை போட முடியாது
பொஸ்னியாவில் முஸ்லிம்களின் விகிதாசாரம் வெகுவாகக் குறைந்தது. இதனால் ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு 'இஸ்லாமியக் குடியரசு' தோன்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. இது ஐ.நா கடந்த காலங்களில் செய்த அட்டூழியங்களில் சில பகுதி மட்டும் தான்.
ஈழம் போல திரைமறைவில் கிடக்கும் விடயங்கள் எவ்வளவோ? இது போன்ற சம்பவங்களுக்காக ஐ.நா ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. ஒரு அறிக்கையில் அனைத்தையும் சமாளித்துவிடும்.
அத்தோடு ஐ.நாவின் தீர்ப்பையோ, அதன் நடவடிக்கைகளையோ அவ்வளவு இலகுவாக யாரும் எடை போட்டு விட முடியாது.
ஏனொனில் அந்தப் பெரிய நிறுவனத்துக்கு பின்னால் இருப்பது அமெரிக்கா என்ற பெரும் பணக்காரன். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதைச் சொல்லியும் சமாளிக்கலாம்..!