24 மாதங்களில் அச்சடித்த பணத் தொகை எவ்வளவு? வெளியானது மலைக்க வைக்கும் விபரம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதிகளவில் பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
அதனை நிரூபிக்கும் வகையில் அரசாங்கம் எவ்வளவு தொகை பணத்தை அச்சடித்துள்ளது என்பதனை இன்றையதினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன(Eran Wickramaratne) சபையில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அச்சடிக்கப்பட்டமையால் நாட்டின் பணவீக்கம்16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
