காவல் நிலையத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை
ஹோமாகம காவல் நிலையத்தின் சிறை அறையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக, அந்தக் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மேலும் இரு அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
இது குறித்து ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவிக்கையில், குறித்த அதிகாரிகள் நாளை (29) ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்கள் பதிவு
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வரும் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஹோமாகம காவல் நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில், காவல் நிலையத்தில் கடமையிலிருந்த நான்கு காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்
முன்னதாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, ஊழல் தடுப்பு மற்றும் சோதனைப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளைத் தவிர, மேலும் நான்கு காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபருடன் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபரிடமிருந்தும் வாக்குமூலம் பெறுவதற்காக, நீதிமன்ற உத்தரவைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |