அமெரிக்க தலைநகரில் பரபரப்பு:வீடொன்றை சோதனையிட முயன்றவேளை திடீரென வெடித்தது குண்டு (காணொளி)
அமெரிக்காவில் வீடொன்றை சோதனையிட சென்ற காவல்துறையினர் அந்த வீட்டில் திடீரென குண்டு வெடித்ததில் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் காவல்துறையினர் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர்.
திடீரென வீட்டில் குண்டு வெடித்தது
அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதன்போது திடீரென அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு முற்றிலும் இடிந்தது
குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற காவல்துறைஅதிகாரிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து காவல்துறையினர் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |