பிரித்தானியர்களுக்கு விதிக்கப்படவுள்ள பாரிய அபராத தொகை
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வெப்பசலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் தண்ணீர் குழாய்த் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் கார்களை சுத்தம் செய்யவும் குறிப்பிட்ட குழாய்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமன்றி அலங்கார குளங்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கும் தண்ணீர் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 5ம் திகதி நடைமுறைக்கு வரவிருக்கும் குறித்த தடை உத்தரவை மீறும் வாடிக்கையாளர்கள் 1,000 பவுண்டுகள் வரையில் அபராதம் செலுத்த நேரிடும், மேலும் இந்த தடை உத்தரவானது ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஒப் வைட் பிராந்தியத்தில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
2012க்கு பின்னர் குறித்த பகுதியில் இந்த தடை உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் தண்ணீர் வழங்கல் முறைப்படி முன்னெடுக்கப்படும் என்றே Southern Water நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் முதல் முறையாக 40C க்கும் அதிகமான வெப்பநிலையுடன் பிரித்தானியா அதன் உச்ச வெப்பமான நாளை பதிவு செய்திருந்தது. சுட்டெரிக்கும் வானிலை நாடு முழுவதும் பல காட்டுத் தீக்கு வழிவகுத்ததுடன், பல குடும்பங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
