தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மனிதநேய மிதிவண்டிப் பயணம் - ஐ.நாவை நோக்கி நகர்கிறது (படங்கள்)
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை(2) அன்று ஆரம்பித்த மனிதநேய மிதிவண்டிப்பயணம் இன்று மூன்றாவது நாள் பயணத்தைக் கடந்துள்ளது.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை அரங்கை நோக்கி நகரும் இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக, நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையக முன்றலில் பிற்பகலில் ஒன்று கூடல் நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும் தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வை வழங்க வலியுத்தியும் 25 ஆவது தடவையாக இந்த மிதிவண்டிப் பயணம் இடம்பெற்று வருகிறது.
மனிதநேய மிதிவண்டிப் பயணம்
நெதர்லர்ந்தின் டென்ஹாக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில் கடந்த வெள்ளியன்று ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று மூன்றாவது நாளை பெல்ஜிய எல்லையில் முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக நேற்று பிரேடா மாநகரத்தைச் சென்ற இந்தப் பயண அணி அதன் பின்னர் தமது சவாலான பயணத்தை நேற்றும் இன்றும் தொடர்ந்திருந்தது.
நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தின் தலைநகர் பிரெசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பிற்பகலில் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்த அணி இணைந்து கொள்ளும்.
தமிழ் மக்களை பங்கெடுக்க அழைப்பு
அத்துடன் அங்குள்ள வெளிநாட்டமைச்சு மற்றும் முக்கிய மையங்களுடனும் அரசியல் சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகலில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையக முன்றலில் இடம்பெறும் ஒன்றுகூடல் நிகழ்வில் அங்குள்ள தமிழ்மக்கள் பங்கெடுக்கவேண்டுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

