சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரத போராட்டம் : ஐ.நாவுக்கு பறந்த முக்கிய கடிதம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 25.09.2025 அன்று யாழ்ப்பாணம் செம்மணி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று (01) வரை முன்னெடுக்கப்படுகின்ற இந்த போராட்டத்தின் ஊடாக சர்வதேசத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும், சிறிலங்கவின் உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரித்தும், செம்மணி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனித புதைகுழிகள் விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன வீசாரணை ஆணையகத்தை நியமித்திட கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தக் கடிதத்தில், ஐ நா.மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வலியுறுத்தி கூறியுள்ள விடயங்களை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அனைத்து வகையான உள்நாட்டு பொறிமுறை மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம்(Office of the Missing Persons,OMP) ஆகியவற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடராது நிறுத்துவதற்கு பின்வரும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
1)அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
2)ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
3)ஊடகவியலாளர்கள் தமது சுயாதீனமான ஊடகப்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
4)சிங்கள குடியேற்றம், பொளத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.
5) தமிழர் தாயகப் பரப்பில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
6) மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், நீதி வேண்டி போராடுவர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் அச்சுறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
7) எமது தேசத்தற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உடன் நிறுத்தப்பட்டவேண்டும்.
8)எமது வளங்கள் சுரண்டப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
9) பயங்கரவாத தடுப்புச் சட்டம், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஆகிய விடயங்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



