உயிரிழந்த மனைவிக்கு கணவன் செய்த மனமுருகும் செயல்
பாம்பு கடித்து உயிரிழந்த தனது மனைவியின் நிலை எவருக்கும் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்த கணவன் தான் கட்டிய புதிய வீட்டில் இறந்துபோன மனைவிக்கு சிலை எழுப்பியது அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இருசன் - நீலா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மற்ற இரண்டு பேரும் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது.
பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி
கடந்த ஓராண்டுக்கு முன்பு அடிப்படை வசதி இல்லாத வீடு ஒன்றில் இருசன் தங்கி வந்துள்ளார். அப்போது அவரது மனைவி நீலாவை இரவு நேரத்தில் பாம்பு ஒன்று கடித்து அதன் மூலம் அவர் உயிரிழந்தும் போயுள்ளார். மனைவியின் பிரிவால் அதிக மன உளைச்சலிலும் இருசன் இருந்து வந்துள்ளார்.
இதன் பின்னர், தனது மனைவிக்கு நேர்ந்த துயரம் குடும்பத்தில் இனி யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த இருசன், உரிய அடிப்படை வசதி உள்ள வீட்டை கட்டவும் முடிவு செய்துள்ளார். சமீபத்தில் தான் நினைத்தது போல வீடு ஒன்றையும் இருசன் கட்டி முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த வீட்டின் வரவேற்பு அறையில் தனது அன்பான மனைவிக்கு சிலை ஒன்றையும் வைத்துள்ளார் இருசன்.
மனைவிக்கு புதிய வீட்டில் சிலை
இதுகுறித்து பேசும் இருசன், சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் உயிரிழந்த நபர்களுக்கு குடும்பத்தினர் சிலை வைப்பது குறித்து செய்தியை அடிக்கடி கேட்டு வந்ததாகவும், தான் கஷ்டப்படும் காலத்தில் உடன் இருந்த மனைவிக்கு புதிய வீட்டில் சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக சென்னையை சேர்ந்த சிலை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மனைவியின் உருவ சிலையையும் இருசன் உருவாக்கி உள்ளார். மேலும் தனது மனைவியின் நகையை அந்த சிலைக்கு இருசன் அணிந்துள்ளதாகவும் தெரிகிறது. மனைவிக்காக கணவர் செய்த விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் உருக வைத்துள்ளது.