மைத்திரி ரணில் அரசின் கபடத்தனம் - வெளிப்படுத்திய ஐ.நா அறிக்கையாளர்
ரணில் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் பொருத்தமான நிலைமாறுகால நிகழ்சிநிரலைஉருவாக்க தயக்கம் கொண்டிருந்தனர் என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தென்னாபிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளிற்கான அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
முன்னைய அரசாங்கத்துடனான எனது அனுபவங்கள் குறித்தும் நான் விசேட அறிக்கையாளராக இருந்தவேளை அரசாங்கங்களுடனான எனது அனுபவம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசாங்கங்கள் எப்போதும் ஒற்றை கல்லால் உருவானவை இல்லை, சிறந்த எண்ணப்பாங்குகளும் ஆழமான எதிர்ப்புணர்வுகளும் கொண்டவை. முன்னைய அரசாங்கத்துடனான ஈடுபாட்டின் போது நான் அதிகம் எதிர்கொண்ட தடை என்னவென்றால் அவர்கள் அரச தலைவரும் பிரதமரும் பொருத்தமான நிலைமாறுகால நிகழ்சிநிரலை உருவாக்க தயக்கம் கொண்டிருந்தனர்.
அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கவும் இல்லை ,அதற்கு எதிராகவும் செயற்படவில்லை,அதனை அப்படியே நடுவானில் விட்டனர் – ஏனையவர்கள் அதனை தாக்கக்கூடிய இலக்காக மாற்றினார்கள். அவர்கள் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் எதனை செய்ததோ அதனையே முன்னைய அரசாங்கத்தின் பிரதமரும் அரச தலைவரும் செய்தனர்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவை என கருதினார்கள்.
நிலைமாறுகால நீதி தொடர்பான தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்ற முன்வரவில்லை.
இலங்கையில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை என்பதை தெரிவிப்பதில் கவலையடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.
