“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”... பதவியேற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர்
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
ஸ்டாலின் உடன் 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டர். அத்துடன் ஆளுநர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைதர்தார்.
ஸ்டாலின் பதவியேற்கும் போது “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டமை எல்லோரின் கவனததையும் பெரிதும் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்மை அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கின்றார். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்தனர்.
இதற்கான தீர்மான கடிதத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர். நேற்று முன்தினம் அந்த கடிதத்துடன் மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அந்த கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திறந்தவெளி பகுதியில் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 200 பேருக்கு மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.