சகித்துக்கொள்வதில் எனக்கு பலவருட அனுபவம் உண்டு - பிரதமர் மகிந்த பதிலடி
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக அரசியலில் தாம் அனுபவம் பெற்றுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கத்தினருடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஒரு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். காலிமுகத்திடலில் உள்ள குழுக்களுக்கும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் எவரும் முன்வரவில்லை, இன்றும் அவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகளும் நட்பு நாடுகளும் இந்த நேரத்தில் எமக்கு உதவ முன்வந்துள்ளன என்றார்.
