ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய முகங்கள் ரணில் பக்கம் ‘பல்டி’
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய முகங்கள் ஆளும் தரப்புடன் இணையப்போவதான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுடன் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தலைமையில் பதுளையில் நேற்று(14) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹரினுடன் தான் பயணம்
அதன்பின் கருத்து வெளியிட்ட அவர்,“ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, செயலாளர் நான்.
இருவரும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். எனக்கு கட்சி இல்லை. எனது கட்சி ஹரினின் கட்சி தான்.
அவருடன் இணைந்து தான் தேர்தலிலும் களமிறங்குவேன்” - என்றார்.
வடிவேல் சுரேஷ் விரைவில் எம்முடன் இணைவார்.” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்துப் பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் விரைவில் அதிபரிடம் சரணடைவார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலேயே அதிபர் நாட்டை பொறுப்பேற்றார். அவர் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருகின்றார்” - எனவும் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
சஜித் அணியின் நிலைப்பாடு
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால் தமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தவறான முடிவை எடுத்து தனது அரசியல் வாழ்வுக்கு ஹரிசன் முடிவை தேடிக்கொண்டுள்ளார் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
