இலங்கையில் முதலீடு செய்ய வந்த பிரபல சர்வதேச தொழிலதிபருக்கு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் ஏற்பட்ட நெருக்கடி!
பிரபல சர்வதேச தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விசாரணைக்கான அழைப்பை கிளிநொச்சி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.
வாக்கு மூலம் ஒன்றினைப்பெறுவதற்காக 24.02.2023 நாளை காலை 9 மணிக்கு பூநகரி வீதி, குமரபுரம், பரந்தன் என்னும் முகவரியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறும் குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம், நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்காக அந்நிய செலாவணியை ஈட்டும் நோக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்களை சிறிலங்காவில் முதலீடு செய்யுமாறு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வரும் நிலையில், பெரும் முதலீட்டாளருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருப்பதானது பல்வேறு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான பொய் வாக்குறுதிகளை நம்பி, புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை செய்ய முடியும் என ஏனைய முதலீட்டாளர்களும் ஐயம் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
