தொடருந்து மூலம் போதைபொருள் கடத்தல்...! பெண்ணொருவர் கைது
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவப்பங்கேணியில் வைத்து இன்று (08-06-2026) காலையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை மட்டு தலைமையக காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டு தலைமையகக் காவல்துறை ஊழல் ஒழிப்புப் பிரிவு ஜெயசிங்கவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக மட்டக்களப்புக்குத் தொடருந்தில் இன்று திங்கட்கிழமை காலையில் ஐஸ் போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரப்பட்டு வீட்டில் வியாபாரத்துக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 29 வயதான குறித்த பெண் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பெண்ணுக்கு இரண்டு சிறுவர்கள் உள்ளதுடன் கணவர் வேலைவாய்ப்பைப் பெற்று மத்திய கிழக்கு நாட்டில் இருந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக இவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவர், போதைப்பொருள் வியாபாரிகள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளார் மற்றும் இவர் யார் யாருக்கு வியாபாரம் செய்துள்ளார் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு இவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 20 மணி நேரம் முன்