உயிரிழந்த உயரமான யானை - வைத்தியசாலையில் இருந்து கண்ணீர் சிந்திய மகிந்த
இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கவன்திஸ்ஸ யானை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையின் பிரபலமான யானையான ‘காவந்திஸ்ஸ’வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அரசாட்சியின் அடையாளம்
“மாபெரும் வனத்தின் மன்னனான துவிரத கஜ காவந்திஸ்ஸவை, வனமே கடைசியாகத் தழுவியது என்று நான் நம்புகிறேன்” எனத் தனது பதிவை ஆரம்பித்துள்ள அவர், இலங்கையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள சிறப்பிடத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் யானைகள் முக்கிய பங்கு வகித்துள்ளதைக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச, மகாவம்சம், ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹெரா, முடிசூட்டு விழாக்கள் மற்றும் போர்க்களங்கள் எனப் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களிலும் யானைகள் இடம்பெற்றுள்ளதைச் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாட்சியின் அடையாளமாக விளங்கிய யானைகள், வரலாற்றில் மன்னர்களுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி அஞ்சலி
பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள இடத்தையும் நினைவுகூர்ந்த அவர், இலங்கையின் கலாசாரம், மதம், கலை மற்றும் நாட்டுப்புற வாழ்வுடன் யானைகள் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

பெருமை, வலிமை, பொறுமை மற்றும் கருணையின் அடையாளமாக விளங்கும் யானைகளைப் பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, யானை மன்னன் ‘காவந்திஸ்ஸ’வுக்கு தனது இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த (12) ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |