அதிபர் ரணிலின் யோசனைக்கு நீதி சேவைகள் ஆணைக்குழு அதிருப்தி!
நாடாளுமன்ற பிரதி செயலாளர் டிக்கிரி ஜயதிலக்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரியை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கும் பிரேரணைக்கு இலங்கை நீதி சேவைகள் ஆணைக்குழு (JSA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட நீதிமன்ற நியமனங்கள் குறித்தான யோசனைக்கு நீதி சேவைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நீதி சேவைகள் ஆணைக்குழு
"நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றதன் விளைவாக டிக்கிரி ஜயதிலக்க எதிர்காலத்தில் நீதித்துறை உறுப்பினராக கடமைகளை பொறுப்பேற்க தகுதியற்றவர்.
அதிபரின் தற்போதைய முடிவு நீதித்துறையின் சுதந்திரத்திற்கு குறிப்பாக விசாரணை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சுதந்திரத்திற்கு பாதகமானது.
நீதித்துறை அதிகாரி இளையவர் மற்றும் நீதித்துறை மூப்புக்கு அடுத்தபடியாக உள்ள நீதித்துறை அதிகாரிகளுக்கு இந்த நியமனம் அநீதியானது.
இதனால் டிக்கிரி ஜயதிலக்கவை உயர் நீதிமன்றத்திற்கு நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் போது மூத்ததன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்." என நீதி சேவைகள் ஆணைக்குழு அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
