ரணில் மீண்டும் அதிபரானால்...பகிரங்க எச்சரிக்கை விடும் வே.இராதாகிருஷ்ணன்
மக்கள் ஆணையின்றி அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட்டால் இதனை விட மோசமான முறையில் நாடு ஆட்சியமைக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியன் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில உள்ள கட்சி அலுவகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிபர் சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டை இட்டுச் செல்கிறார் என்றும், மக்கள் பலம் இல்லாத காரணத்தினால் ஆணைக்குழுக்களை நியமித்து தேர்தலை ஒத்திவைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போதைய அதிபரும் செயற்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் நிலைமை
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பெருந்தோட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக இராதாகிருஷ்ணன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்து மக்களின் முக்கிய வருடாந்த பண்டிகையான தீபாவளி பண்டிகை 12ஆம் திகதி வருகின்றதால் அதனை கொண்டாடுவதற்கு கூட பெருந்தோட்ட மக்களுக்கு வசதிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் ஆணையின்றி அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட்டால் நாட்டு மக்களின் நிலைமை இதனை விட மோசமாக இருக்கும் என்றார்.