தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்...! சி.வி.கே.சிவஞானம் தகவல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடியே யாரை நியமிப்பது என இறுதி முடிவு எடுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (16.10.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை.
தேசியப் பட்டியல் நியமனம்
இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும் என நான் நம்புகின்றேன். அதேநேரத்தில் இப்போது வரையில் யாரையும் யாரும் தீர்மானித்ததாகவும் எனக்குத் தெரியவும் இல்லை.
எனினும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் வேறு எவரும் யாருடனேயும் ஏதும் பேசியிருக்கின்றார்களோ என்றும் தெரியவில்லை.
ஆனாலும், கட்சியைப் பொறுத்த வரையில் இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கட்சியின் அரசியல் குழு கூடி இந்த நியமனம் தொடர்பில் நிச்சயம் ஒரு முடிவு எடுக்கும் என சி.வி.கே. குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்குப் போக மாட்டேன் என்றும், அவ்வாறு தேசியப் பட்டியல் மூலமாகச் செல்வதற்குத் தனக்கு விருப்பம் இல்லை என்றும் சுமந்திரன் தெளிவாகத் தன்னிடம் சொல்லியுள்ளார் என்று சி.வி.கே.சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |