சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை போகிறதா ஏறாவூர் பற்று பிரதேச சபை..!
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதிகளில் சில காணி மாபியாக்களினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை துணைபோவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதிகளில் அனுமதி பெறப்படாத வீட்டுத் திட்டங்கள், வீதி அமைக்கும் பணிகள், சுற்று மதில்கள் என பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றை அமைப்பதற்கான அனுமதிகள் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக பெறப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக பகுதிகளான தளவாய், ஐயன்கேணி, களுவன்கேணி, போன்ற இடங்களில் போலி காணி ஆவனங்களை சமர்ப்பித்து கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதிகளில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனம் ஒன்றினால் அரசாங்கத்தின் எந்தவித அனுமதியும் இன்றி வீட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிதியை பெற்று போலி காணி உறுதிகளை சமர்ப்பித்து ஏழைகளின் பெயரில் உருவாக்கப்படும் இது போன்ற வீட்டு திட்டங்களின் பின்னால் உள்ளவர்கள் யார்?
இதே போன்று ஏறாவூர் நகர சபை குப்பைகளை கொட்டுவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை எல்லைக்குள் வாங்கப்பட்டுள்ள காணி குறித்தும், அங்கு குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இது போன்ற செயற்பாடுகளுக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை எவ்வாறு அனுமதி வழங்கியது?
அனுமதி வழங்காது நடைபெறும் இது போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?