வவுனியாவில் அரச அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோதமாக பாரிய காடழிப்பு (படங்கள்)
ஓமந்தை வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு அரச அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் காவல்துறையினரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப் பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக கிராம அலுவலர் இருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டு வருகின்றது.
முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை
இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினமும் (23.04) இரண்டு கிராம அலுவலர்களின் பிரசன்னத்துடன் குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு சென்ற கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் காவல்துறையினருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இருப்பினும் காவல்துறையினர் தமது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா
காடழிப்பு இடம்பெற்ற போது குறித்த பகுதிக்கு தமது பகுதியில் இல்லாத வாகனங்கள் சில வந்து சென்றதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் இன்று (24.04) எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
