சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் மேலும் 8 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் - பேசாலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் குழுவினரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், 18 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான கடற் பயணம்
ஆட் கடத்தல்காரர்கள் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் மக்களை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதால், ஆபத்தான கடற் பயணங்களில், உயிரைப் பணயம் வைத்து பலியாக வேண்டாம் என பொதுமக்களை கடற்படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
