ஐ.எம்.எவ் ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில் இழுபறி
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கை விபரங்கள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வரி உள்ளிட்ட சில உணர்திறன் மிக்க விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளதால் இந்த உடன்படிக்கை தொடர்பில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளதால் அதனை மறைக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டிய நிலையில், அது குறித்து நிதி அமைச்சருடன் பேச்சு நடத்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினரே, உங்களது கேள்வி குறித்து இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநருடன் நான் பேச்சு நடத்தியிருந்தேன்.
அதனை சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு எதிர்ப்பையும் தாம் வெளியிடவில்லை என அவர் கூறினார். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதற்கு எப்போதும் தாம் தாயராக உள்ளதாக அவர் கூறினார்.
எனினும் நிதி அமைச்சரே அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த யோசனைகளில் முன்னரே அறிவிக்க முடியாத வரி தொடர்பான உணர்திறன்மிக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே அது தொடர்பில் நிதி அமைச்சருடன் கலந்துரையாடி, தீர்மானத்தை மேற்கொள்ளுமாறே ஆளுநர் என்னிடம் குறிப்பிட்டார்” என்றார்.
