தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்! கோரிக்கைக்கு உறுதியளித்த ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவி தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் கோரிக்கைக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
தொழில்நுட்ப பகுப்பாய்வு
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் பங்கேற்க மறுப்பு தெரிவித்த நிலையில், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.
இந்த கூட்டத்தில் சுமந்திரன் பங்கேற்றமை தொடர்பில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான முக்கிய கேள்வியை சுமந்திரன் எழுப்பியதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமை
இதற்கமைய, குறித்த அறிக்கை இலங்கை தமிழரசு கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டதாக அதிபர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |