இலங்கை வரலாற்றில் முக்கியமான படிக்கல்! ரணில் பெருமூச்சு
நாட்டை கடன் நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை வரலாற்றில் இது முக்கியமான படிக்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துரைத்த ரணில், "வீழ்ச்சியில் இருந்து மீள்வது, கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் பெறுவது மட்டுமன்றி, சமூக துறைகளைப் பாதுகாப்பது, வாழ்க்கை முறையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது என்பன முக்கியமாகும்.
தொழில் துறையாக நாட்டை மேம்படுத்தல்
அதனைவிட தற்போதைய நிலைமையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியமானதாகும்.
சமூகக் கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல் என்பவற்றை முன்னெடுக்கும் அதேநேரம் போட்டித் தன்மை மிகுந்த ஏற்றுமதியை அடிப்டையாகக்கொண்ட தொழில் துறையாக நாட்டை மேம்படுத்துவதை புதிய பொருளாதார யுகமாக கருதுகின்றோம்.
இதன் ஆரம்பம் கடிமானதாக இருக்கும், ஆனால் நாம் அதனையே பின்தொடர்ந்தால் எம்மால் இன்னும் முன்னேற முடியும். இப்போதைக்கு எது தேவையோ அதுவே எமது அர்ப்பணிப்பாக இருத்தல் வேண்டும்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்
எனினும், இங்கு நாம் எமது இலக்கை அடைவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்.
இது நமது சமூக சேவைகளை நிலைநிறுத்துவதை எளிதாக்கும். இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், முடிந்தால் கடன்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும்" என்றார்.

