முக்கிய நாடுகளின் பங்குபற்றலுடன் நாளை கூடுகிறது மாநாடு - சிறிலங்கா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் நோக்கில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, பிரான்ஸ் கருவூல இயக்குநர் ஜெனரல் புருனோ லு மைரே ஆகியோர் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் பங்குபற்றல்
இதே வேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியமும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக வங்கியின் பங்குபற்றல்
இதன் போது இலங்கையின் சார்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படும் வசந்தகால கூட்டங்களுடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
