வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியான புதிய தகவல்
இலங்கையில் அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்ய அனுமதி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வாகன இறக்குமதி தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.குறிப்பாக அமைச்சரவையில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பொது, போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான வேலைப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன” என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில்,கடந்த 09ஆம் திகதியில் இருந்து வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
அத்துடன், கடந்த ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று பொது போக்குவரத்து பேருந்துகள், தாங்கிகள், பவுசர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சிறப்பு நோக்கத்திற்காக கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.