மின்சார விநியோகத்தில் பாதிப்பு; அவசரகால சட்டத்தை உடனடியாக இரத்து செய்யவும்!
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.
அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொது அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் ஊடாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வு காண முடியாது என அமெரிக்கா உள்ளிட்ட 35க்கும் அதிக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அல்லது அறிக்கைகளை விடுத்து அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் சகல பாதுகாப்பு படையினரின் விடுமுறைகளும் உடன் நடைமுறைப்படும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சகல பாதுகாப்பு தரப்பினரையும் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

