பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய அநுர! எதிர்தரப்புக்கள் பகிரங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு செலவுகள் அனைத்தையும் பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கருத முடியும் என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ ரணில் விக்ரமசிங்கவை ஒரு முறை கைது செய்தால், அநுரவை பத்து முறை கைது செய்ய முடியும்.
அராஜக பாதையை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளாக நாட்டில் காணப்பட்ட ஜனநாயக சுதந்திரமும் பல கட்சி ஆட்சி முறைமையும் இல்லாதொழிக்கப்பட்டு தனிகட்சி ஆட்சியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இது நிர்வாக பிரச்சினையாகும். அவ்வாறிருக்கையில் இதில் புலனாய்வுத்துறை தலையிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக அச்சுறுத்தவே முயற்சிக்கின்றனர்.
ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்த ஜனநாயக சுதந்திரம் இங்கு கிடைக்கப் போவதில்லை.
எனவே அந்த மக்களையும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

