இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகள்
இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக, இரு நாடுகளின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர விஜயங்களை எளிதாக்குதல், எல்லை பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான அதிகாரப்பூர்வ மற்றும் உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுதல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு குடிமக்களின் விசா, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தி சுமுகமாக்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ஆள் கடத்தல், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல், குடிவரவுத் துறை அதிகாரிகளின் அறிவு, தொழில்முறை நுணுக்கங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு ஆவணத்திற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை தங்களது சட்டபூர்வ அனுமதியை (Clearance) ஏற்கனவே வழங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த விசேட முன்மொழிவுக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |