தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தாக்கம்: சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு
தமிழ் பொது வேட்பாளர் விடயம் தென்னிலங்கையில் உள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த பொது வேட்பாளர் விடயத்தை எதிர்ப்பவர்கள், வாக்களிக்க கூடாது என கூறுபவர்கள் என்ன காரணத்திற்காக எதிர்க்கிறார்கள் அல்லது யாரை ஆதரிக்கின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் ஆதரவு
மேலும், பிரதான வேட்பாளர்களாக இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுக்கு தயார் என்றால் அது தொடர்பில் பரிசீலிப்பதற்கு தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலங்களில் யாருமே இதுவரை யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களில் ஆதரவு திரட்டியதாக அறியவில்லை என்றும், ஆனால் இவ்வருடம் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் யாழ்பாணத்திற்கு வந்து ஆதரவு கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த பொதுவேட்பாளர் என்ற கருப்பொருள் பிரதான வேட்பாளர்களிடத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |