உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பரீட்சை பெறுபேறுகளும் தாமதமாகிக்கொண்டு செல்கின்றன.
இதேவேளை, சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை (16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணகல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.