வெளிநாடு செல்வோருக்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டில் வேலை தேடிச் சென்று மோசடியில் சிக்கிக்கொள்வதை தவிர்ப்பதற்காகவே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
போலி முகவர்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களில் சிறிய அளவினரே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களே அங்கு பாதிப்புகளில் சிக்கி கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீளப் பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் காவல்துறையினரை நாட முடியாத நிலையும் உருவாக்கியுள்ளது.
இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தையும் இழந்து நிர்க்கதியாக நிலைக்கு செல்ல நேரிடுகின்றது.
இவ்வாறான சட்டவிரோத வெளிநாட்டு பிரவேசத்தை தடுக்கவும், வேலை தேடி வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளவர்களிற்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காப்புறுதி பாதுகாப்பு
இதனால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்து செல்பவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு செல்வதன் மூலம் அவர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கூடுதலான பிரதிபலன்களும் கிடைக்கின்றன என தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து செல்பவர்கள் அங்கு வெளிநாட்டில் சிக்கல்களை எதிர் கொண்டால் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சகம் கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிடவும் அவர் வலியுறுத்தினார்.
தவிரவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் குறித்த முகவருக்கு உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பு நிறுவனமா என்பதை இதனூடாக கண்டறியமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுவோர் 1989 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |