கடந்த வருடம் சிறி லங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட நிலை : பயணிகள் பெரும் சிரமம்
தேவையான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் கடந்த ஆண்டு 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விமானங்கள் இரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பல சந்தர்ப்பங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.
நல்லாட்சி அரசின் செயற்பாடு
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு சிறி லங்கன் விமான சேவைக்கு ஆறு A-350 ரக பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் முந்நூறுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை கொள்வனவு செய்வது இரத்துச் செய்யப்பட்ட போதிலும் மாற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறக்கக்கூடிய விமானங்களின் எண்ணிக்கை
இதற்கிடையில், விமான நிறுவனத்திடம் இருந்த இருபத்தி நான்கு விமானங்களில் ஆறு, சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பறக்கக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை பதினெட்டாகக் குறைத்தது.
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை மற்றும் தாமதம் குறித்து விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவிக்கையில்,
விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உலகில் விமான உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை மற்றும் வேறு பல காரணிகள் உதிரிப்பாகங்களை வாங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
கடந்த டிசம்பரில் இருந்து இரண்டு குத்தகை முறைகளின் கீழ் மூன்று பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்ததன் மூலம் தாமதங்கள் மற்றும் இரத்துச்செய்தல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தீபால் பெரேரா தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |