நக்கிள்ஸ் குகையில் குழந்தை பெற்ற சிறுமிக்கு எதிர்பாராமல் கிடைத்த பல உதவி
நக்கிள்ஸ் குகையில் குழந்தை பெற்ற சிறுமிக்கு பலரும் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயது சிறுமிக்கும் அவரது பச்சிளம் குழந்தைக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நலன்புரி உதவிகளையும் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் காணாமல் போயிருந்த குறித்த சிறுமி, நவம்பர் மாதம் கடந்த 14 ஆம் திகதி மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதி குகையொன்றிலிருந்து இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் உடுதும்பர காவல்துறையினரால் அச்சிறுமி மீட்கப்பட்டிருந்தார்.
விசேட ஏற்பாடு
எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகளுமின்றி குகைக்குள் பிரசவித்திருந்த தாயும் சேயும், மீட்கப்பட்ட உடனேயே காவல்துறை பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிறுமியினதும் குழந்தையினதும் உடல் மற்றும் உள நலனை உறுதிப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவரது தொடர் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளிடம் உறுதி
தற்போது சிறுமியும் குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளின் முழுமையான கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான சந்தேகநபரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 36 வயதுடைய உறவினரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர காவல்துறையினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இதேவேளை, வேறு சில பிரமுகர்களும் இப் பெண்ணுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளனர்.
குறிப்பாக பெண்ணின் கல்விக்கு ஊக்கமளித்து நிதியதவி வழங்கவுள்ளதாக பலர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |