நாமல் ராஜபக்சவுக்கு டிசம்பர் மாதம் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களான நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தனாவை எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவும் உத்தரவிட்டார்.

முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச, கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கு விசாரணைக்காக சற்றுமுன்னர் (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
எயார்பஸ் கொள்வனவு வழக்கு
இதேவேளை எயார்பஸ் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.

நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிணை கோரி சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
எனினும், பிணை வழங்குவதற்கான விசேட சூழ்நிலைக் காரணிகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என வழக்குத் தொடுக்கும் தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |