செம்மணி மனிதப் புதைகுழி : வயது வந்தோரின் எலும்புக்கூடுகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை என்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக நேற்று (19) பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
ராஜ் சோமதேவவின் அறிக்கை
இந்த அமர்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், ஞா.ரணித்தா, மரியதாஸ் யூட் டினேஷ், கு.குருபரன், எஸ்.மணிவண்ணன், க.சுகாஷ், தி.டிலக்ஷனா, பெனிஸ்லஸ் துஷான் மற்றும் ஜெ.நிஷாந்தன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும் அரச தரப்பின் சார்பில் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான் எஸ்.லெனின்குமார், 'பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அறிக்கைகளின் உள்ளடக்கங்களுக்கும் நான்காவது அறிக்கையின் உள்ளடக்கத்துக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
எது எவ்வாறிருப்பினும் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அகழ்வுப்பணிகள் தொடர்பான அவரது அவதானிப்பு மற்றும் கருத்தாகவே அமைந்திருக்கிறது. எனவே அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை' எனக் குறிப்பிட்டார்.
அகழ்வுப்பணிகளை முன்னெடுத்தல்
மேலும் காபன் திகதியிடல் பரிசோதனைக்கு அப்பால் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் உள்ள வேறு பரிசோதனை முறைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், காபன் திகதியிடல் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சர்வதேச நிறுவனங்கள் நான்கைப் பெயரிடுமாறும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்தோடு இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு அனுமதி அளித்த நீதிவான், பரிசோதனை மேற்கொள்ளப்படும் திகதி மன்றுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பிரசன்னம் உள்வாங்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஆராயப்படும் என்றும் நீதிவான் எஸ்.லெனின்குமார் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |