செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று
செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று (19) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சேவிடம் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தது.
கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கில் லான்ஸ் கோப்ரல் சோமரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய முடிவு
அதன் அடிப்படையில் சோமரத்ன ராஜபக்சேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலங்களை பெற்றமை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, புதைகுழியின் கால எல்லையை அறிவதற்காக கார்பன் (C - 14) பரிசோதனைகளை செய்வதற்கான அனுமதியை கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிய போது, நவம்பர் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது ஆராய்வதாக மன்று கூறியிருந்த நிலையில், அது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இறுதி கட்டங்களில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில், 05 சோதனைக்குழிகளுக்குள், 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால், நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும், நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டம்
இவ்வாறான நிலையில், புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு.

இந்நிலையிலையே,நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும், தொல்லியல் பேராசிரியரின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |